தரைப்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்; ஆபத்தை உணராத பொது மக்களால் அதிர்ச்சி
தரைப்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் பொது மக்கள் நடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டம் , கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து 1000 கனஅடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவாய்ப்புள்ளது.
இதனால், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் நீரானது வந்து சேர்ந்ததையடுத்து பள்ளிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருப்பதோடு வெளியகரம், நெடியம், சாமந்தவாடா, சொரக்கா பேட்டை தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் பாலத்தை கடக்க முயலவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு பணியில் வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.
இந்நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தரைப்பாலத்தில் நடந்தும், இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் தரைபலத்தை கடப்பவர்களை கட்டுபடுத்த வேண்டும் என்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.