மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் படகுகளுடன் முற்றுகை
மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் படகுகளுடன் சென்று முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.;
எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் படகுகளுடன் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சென்னையில் வெள்ளம் ஏற்படும் அபாயம் எனவும் புகார் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த எண்ணூர் மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வரும் கொசஸ்தலை ஆற்றில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மின் கோபுரம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனை கண்டித்து எண்ணூர் மீனவர்கள் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடத்தை தங்களின் நூற்றுக்கும் மேற்பட்டோர் படகில் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கும் கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுக பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றுலும் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். மீன் இனப்பெருக்கம் மற்றும் மீன்களின் வாழ்விடமான ஆறு, கழிமுகப் பகுதிகளில் கட்டுமான கழிவுப் பொருட்களை கொட்டுவதால் மீன்வளம் அழிந்து விடும் அபாயம் உருவாகுவதாகவும், என மீனவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து படகில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் மீனவர்களிடம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், மற்றும் எண்ணூர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். படகில் வந்து முற்றுகையிட்டு மீனவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.