அறிவு சாரா நகரத்தை எதிர்த்து பாமக சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் அருகே அமைய உள்ள அறிவுசாரா நகரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைப்பதற்காக தமிழக அரசு முப்போகும் விளையும் 1146 ஏக்கர் விளைநிலம், உள்ளிட்ட 1703 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அறிவு நகரம் அமைக்க விளைநிலங்களை படுத்துவதை கைவிட்டு அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்துமாறு அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் வி.எம். பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டு விலை நிலங்களை கையகப்படுத்தி அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விலை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றையும் பாமகவினர் வழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் முனுசாமி, ஒன்றிய செயலாளர் ஜெயபால், இளைஞரணி மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சுதாகர், இளைஞர் சங்கத் தலைவர் அன்பு, முன்னாள் பாமக மாநில துணைத்தலைவர் துரை ஜெயவேல், வன்னியர் சங்கச் செயலாளர் டில்லி பாபு, துணைச் செயலாளர் தனசேகர், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.