ஊத்துக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே மின்மாற்றில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த வேலம்மகண்டிகை பகுதியில் நேற்று முன்தினம் மாலை மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் கிராம மக்கள் அப்பகுதியைச் சேர்ந்த வயர் மேன் பாஸ்கரிடம் தகவல் கூறி உள்ளனர். ஆனால் பாஸ்கர் நேரில் வராமல் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவய்யாவை பார்க்கச் சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது.
வயர் மேன் தகவலின் அடிப்படையில் சிவய்யா நேற்று காலை அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் சரி செய்ய முயன்றுள்ளார்.
அப்போது சிவய்யா மின்சாரம் தாக்கி துக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.அதைத் தொடர்ந்து அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பொதுமக்கள் மீட்டு இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைத்துள்ளனர்.
இதனை அறிந்த போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்த சிவய்யா உடலை கைப்பற்றி திருவள்ளுர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மின்மாற்றியில் அடிக்கடி மழைக்காலங்களில் ஏற்படும் பழுதை சரி செய்ய ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு பலமுறை தகவல் கொடுத்தும் மின்சாரத்துறை அதிகாரிகள் வராத அலட்சியப் போக்கின் காரணத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பென்னலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்மாற்றி பழுது சரி செய்ய சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.