திருவள்ளூர் அருகே போதை பொருளின் தீமைகள்: காவல் துறையினர் விழிப்புணர்வு
பேரம்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தீமைகள் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்;
பைல் படம்
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த பேரம்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு மப்பேடு காவல் துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது மப்பேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன் பேசியதாவது:
ஏதோ ஒரு விதத்தில் ஒரு போதைப் பொருளை முதலில் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் நாட்கள் செல்லச் செல்ல அடுத்தடுத்து எல்லா வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்தி பார்க்க விரும்புகிறார்கள். போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடதோன்றும் முடிவெடுப்பதில் சிக்கல், சிந்தனைத்திறன் குறைவு, ஞாபகமறதி, தனக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று கற்பனை செய்துகொண்டு அதன்படி நடந்து கொள்வது போன்ற மனநல பிரச்சினைகளும் ஏற்படுத்தும் என போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.