திருப்பதி செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூரில் உற்சாக வரவேற்பு
திருப்பதி செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலம் திருவள்ளூர் வழியாக திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
அப்போது திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே முன்னாள் அமைச்சரும், திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி.வி.ரமணா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுக தொண்டர்கள் மலர் தூவி பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்ட அதிமுகவில் மாவட்ட செயலாளர் ரமணா தலைமையில் ஒரு தரப்பினரும், திருத்தணி கோ.ஹரி மற்றும் கமாண்டோ பாஸ்கரன் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி செல்லும் நிலையில், இரு தரப்பினரும் தனித்தனியாக வரவேற்பை அளித்த சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.