தனியார் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து தனியார் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.;
கைது செய்யப்பட்ட குப்புசாமி.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நாள்தோறும் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்ததைதொடர்ந்து சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த தனியார் பேருந்தை சோதனை செய்தபோது, அதில் ஒரு பையில் 4000 போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரை கைது செய்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இது போல் போதை மாத்திரைகள் கடத்திவரப்பட்டதா? யாருக்கு விநியோகம் செய்யப்படுகிறது? இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார்? என்பது குறித்து கைது செய்யப்பட்ட குப்புசாமியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.