குழந்தைகள் கடத்தல் வதந்திகளை நம்ப வேண்டாம்; திருவள்ளூர் கலெக்டர் வேண்டுகோள்
குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வேண்டுகோள் விடுத்தார்.;
பத்திரிகையாளர்களை சந்தித்த கலெக்டர் பிரபு சங்கர்.
குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். அதேபோன்று தகவல் இருந்தால் காவல்துறையை அணுக வேண்டும் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளரை சந்தித்த ஆட்சியர் பிரபு சங்கர் கூறியதாவது,
வட மாநிலத்தவர் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அப்படி வரும் தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். மக்கள் யாரும் தன்னிச்சையாக சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம். திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 39 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு 7 குழந்தை திருமணங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான 48 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள் 200 பேர் உள்ளனர். மாவட்டத்தில் அனுமதி இன்றி இயங்கிய 3 குழந்தைகள் பராமரிப்பு மையத்திலிருந்து குழந்தைகள் மீட்டு பாதுகாப்பான அனுமதி பெற்ற மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப் பழக்கத்தை ஒழிக்க தொடர்ந்து போலீசார் மற்றும் ஆசிரியர்கள் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதை பழக்கத்தில் ஈடுபடும் மாணவரை பள்ளியில் இருந்து நீக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். .மாவட்ட குழந்தைகள் நலக்குழுவு சிறார் நீதிச் சட்டம் கீழ் சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளை சிறார் நீதி வாரியம் முன்பாக ஆஜர்படுத்த வேண்டும்.
அப்படி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவு உறுப்பினராக இருக்க கூடிய விஜயலட்சுமி என்பவர் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி குழந்தையை சட்டத்திற்கு முரணாக எதிர்த்தரப்பினருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டு இருப்பதாகவும். கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று நடைபெற்ற விசாரணை அன்று அந்த குழந்தைக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணை மேற்கொண்டு இருப்பதால் குழந்தைகள் பாதுகாப்பு இயக்குனராகம் அவர் அந்த உறுப்பினர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைக்கு எதிராக மீண்டும் அவர் ஆஜராவதை தவிர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.