தனியார் நிறுவனம் சார்பில் 3 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள் வினியோகம்

வடமதுரை ஊராட்சியில் தனியார் நிறுவனம் விருட்சம் பவுண்டேஷன் இணைந்து 3000 பேருக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.

Update: 2023-09-19 02:38 GMT

தனியார் நிறுவனம் மற்றும் அறக்கட்டளை சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் தனியார் நிறுவனம் விருச்சகம் ஃபவுண்டேஷன் இணைந்து குடும்பத்திற்கு இரண்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குஹேனே நாகல் தனியார் நிறுவனமும்,விருட்சம் பவுண்டேஷனும் இணைந்து திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சியில் ''கிராமப்புற வாழ்வாதார விவசாயிகள் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சியை'' நடத்தினர். எனவே,இந்த ஊராட்சியில் வசிக்கும் 3ஆயிரம் குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி இந்த ஊராட்சியில் உள்ள பெருமாள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு,வடமதுரை ஊராட்சிமன்ற தலைவர் காயத்திரி கோதண்டன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனா அப்புன், துணைத்தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், மல்லியங்குப்பம் ராஜேஷ், சமூக சேவகர் பாகல்மேடு கண்ணன்,விஜயபிரசாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன் கலந்து கொண்டு தென்னங்கன்றை பேணி பாதுகாத்தால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

இதன் பின்னர்,ஒரு குடும்பத்துக்கு இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் 3ஆயிரம் குடும்பங்களுக்கு 6,000 தென்னங்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சியை குஹனே நாகல் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல தலைவர் சோஃபிப் பேர்லீன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றி பேசினார். இதன் பின்னர்,பெருமாள் கோவில் வளாகம்,ஈஸ்வரன் கோவில் வளாகம் உள்ளிட்ட ஊராட்சியில் உள்ள பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிகழ்ச்சியில்,என்.எஸ்.ஜி கமாண்டோ வீரர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில்,ஊராட்சி செயலாளர் கல்பனா விஜயகுமார் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடமதுரை ஊராட்சி மன்ற தலைவர்,துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News