சிறுவாபுரி முருகன் கோவில் மண்டபத்தில் இருந்த பாம்பால் அலறிய பக்தர்கள்

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு மண்டபத்தில் பாம்பு புகுந்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.

Update: 2024-01-30 15:26 GMT

கோவில் மண்டபத்தில் இருந்த பாம்பை லாவகமாக பிடிக்கும் தீயணைப்பு துறை வீரர்.

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு மண்டபத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் அலறியடித்து ஓடினர். தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்ததால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மட்டும் இன்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.


அந்த வகையில் செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் பக்தர்களின்  காத்திருப்பு மண்டபத்தில் மேற்கூரையில் பாம்பு ஒன்று இருந்ததை சில பக்தர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் பாம்பு பாம்பு என கூறிக்கொண்டே அலறியடித்து சிதறி ஓடினர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு துறை வீரர்கள் மின்விசிறியின் மேலே சுருண்ட படி இருந்த  பாம்பை இடுக்கியின் உதவியுடன் லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து பாம்பை கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் விட்டனர். அதன்பின்னரே அங்கு சகஜ நிலை திரும்பியது.

Tags:    

Similar News