திருவள்ளூர் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.டி.ஓ-வை கண்டித்தும், செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் குருவாயல் கிராமத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமத்தில் தனி நபர் ஒருவர் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.இதனை அறிந்த இக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடந்த 7-ம் தேதி 2-வது முறையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும்,இப்பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர்.தகவல் அறிந்து விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக வன்னியர் வாழ்வுரிமை சங்க நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோ.இரவிராஜ் கலந்து கொண்டார்.
எனவே, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அப்பொழுது வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் உறுதி கூறினர்.இதனை ஏற்று அப்பொழுது அனைவரும் கலைந்து சென்றனர்.ஆனால், கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரச்சினை தனிநபர் பிரச்சனை என்றும் இதில் தலையிட முடியாது என்று கோட்டாட்சியர் கூறினாராம்.
இந்நிலையில்,இன்று மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது.இதனை அறிந்த கிராம மக்கள் மற்றும் ரவிராஜ் ஆகியோர் கருப்புக்கொடி ஏந்தி அப்பகுதியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,தனி நபருக்கு ஆதரவாக கோட்டாட்சியர் செயல்படுவதாக கூறி கோஷங்களை எழுப்பினர். மேலும்,இப்பிரச்சனையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், இப்பிரச்சனைக்கு ஊரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்டப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறினர்.தகவல் அறிந்து வெங்கல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.உரிய அனுமதி இன்றி போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினர்.இதனை ஏற்று அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.இப்பிரச்சனையால் சுமார் ஒரு மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.