காக்களூர் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு
காக்களூர் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.;
காக்களூர் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் ஆய்வு செய்து, பால்வளத்துறை மற்றும் இதர துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது செய்தியாளரை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் மார்க்கெட்டில் விற்பனையாக கூடிய பால்களில் மிகக் குறைந்த விலையில் தரமானதாக கொடுக்கப்படுவது ஆவின் பால் மட்டும்தான். விவசாய பெருங்குடி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். அதில் முக்கியமான கோரிக்கை என்பது விவசாயிகள் பாலை சொசைட்டியில் கொடுக்கும்போதே அந்தப் பாலின் கொழுப்பின் அளவு மற்றும் புரத அளவு போன்றவற்றை அளவீடு செய்து அதற்கான விலையை அப்போதே நிர்ணயம் செய்து கொடுப்பது. இந்த நீண்ட நாள் கோரிக்கையை தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் 40 சதவீத விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு கூடிய விரைவில் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் பாலின் கொள்முதல் அளவு மிக அதிக அளவிற்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மூன்று லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் கொள்ளவு வந்துள்ளது. பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆவின் பணியாளர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் மூலமாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றுகின்ற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ பலன்கள் மற்றும் அவர்களின் சம்பளத்தை வங்கியில் செலுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். ஆவின் பொருள்களை சந்தையிடும் பணிகளில் 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளது. இவைகள் எல்லாம் ஒரு நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறிகளாக உள்ளது.
இன்று திருவள்ளூர் மாவட்டம் காக்கலூரில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். தற்போது எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் காரணமாக மின் சாதனம் பயன்பாடு 10 சதவீதம் குறைந்துள்ளது. வெகு விரைவில் ஆவின் வளாகம் ஒரு பசுமை வளாகமாக மாறும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சுற்றுலா மாளிகை கூட்டரங்கில் பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம்-திருவள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பால்வளத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், ஆவின் பொது மேலாளர் ஜி.ரமேஷ் குமார், துணைப் பதிவாளர் (பால்வளம்) சித்ரா, உதவி பொது மேலாளர் சொர்ணகுமார், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மரு.சந்திரபோஸ், முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரகுகுமார், திருவள்ளூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ஜெயசீலன், பொதுகுழு உறுப்பினர் த.எத்திராஜ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், காஞ்சிபுரம்-திருவள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், பால்வளத் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.