திருவள்ளூர் பிரபல துணிக்கடையில் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு
திருவள்ளூரில் பிரபல துணிக்கடையில் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் பகுதியில் ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல் மோதிலால் தெருவில் பிரம்மாண்டமான இரண்டு கிளைகளுடன் இயங்கி வருகிறது.
திருவள்ளூர் ஶ்ரீ குமரன் டெக்ஸ்டைல் 2 கிளைகளிலும் வணிகத்திற்கு ஏற்றார் போல் வணிகவரி எனப்படும் ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை எனவும், விற்பனை செய்யப்படும் துணிகளுக்கு முறையாக ஜிஎஸ்டி பில் வழங்குவதில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில். வணிக வரித்துறை அதிகாரிகள் கடையின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மோதிலால் தெருவில் இயங்கி வரும் ஶ்ரீகுமரன் டெக்ஸ்டைல் இரண்டு கிளைகளுக்கும் நான்கு கார்களில் சென்னையில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வணிகவரித்துறையினர் ஜவுளி கடையில் அதிரடியாக புகுந்து கடையின் ஷட்டர்களை மூடிக்கொண்டு கடையில் வாங்கப்பட்ட துணிகளுக்கு முறையாக ஜிஎஸ்டி பில் உள்ளதா? எவ்வளவு ரூபாய்க்கு துணி வாங்கப்படுகிறது? எவ்வளவு ரூபாய்க்கு துணி விற்கப்படுகிறது. இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
அதே நேரத்தில் தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து விழாக் காலம் வர இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து புத்தாடைகளை வாங்கி செல்வதுண்டு.இதனால் தரமான துணிகளை விற்பனை செய்கிறார்களா? அல்லது எக்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து விலை மலிவான துணிகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்களா? என்றும் கடைகளில் உள்ள கம்ப்யூட்டரில் வாங்கப்பட்டுள்ள மற்றும் விற்கப்பட்டுள்ள பில்லை ஆய்வு செய்தனர்.
சோதனையில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் திருவள்ளூர் ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைலுக்கு சீல் வைக்கப்படுமா அல்லது அபராதம் விதிக்கப்படுமா? என்பது குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் வணிகவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.