கொசஸ்தலை ஆற்றில் கல்லூரி மாணவர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த செக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் (20) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்தார்.
நேற்று பிற்பகல் தமது நண்பர்களுடன் அருகில் உள்ள கொசத்தலை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது விஷ்ணுகுமார் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சேற்றில் சிக்கி அலறி துடித்து மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் ஆற்றில் மாயமான விஷ்ணுகுமாரை தேடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் உயிரிழந்த கல்லூரி மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.