சாலைப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

ஊத்துக்கோட்டையில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-09-27 01:15 GMT

 ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சி திருவள்ளூர் சாலை 8 - வார்டில் எட்டிகுளம் பகுதி உள்ளது. இங்கு150 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை போடப்பட்டது. சாலை கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. எனவே இதை சீரமைத்து புதிதாக சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில். அதன் பேரில் எட்டிக்குளம் பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்க பேரூராட்சி பொது நிதியில் இருந்து ₹ 7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய சிமெண்ட் சாலை அமைக்க பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் படி கடந்த 2 வாரத்திற்கு முன்பு எட்டிகுளம் பகுதியில் சிமெண்ட் சாலை பணி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் சாலையை அகலப்படுத்தி போடவேண்டும் என கூறி சாலைப்பணியை நிறுத்தினர். இதையறிந்த பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் மற்றும் செயல் அலுவலர் சதீஷ் ஆகியோர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜனிடம் எட்டிகுளம் பகுதி மக்கள் , சிமெண்ட் சாலைப்பணி பாதியில் நிற்கிறது அதை விரைந்து முடிக்க வலியுருத்த வேண்டும் என கூறினர்.இதை கேட்ட எம்எல்ஏ இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்றார் அதன்படி அப்பகுதி மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று 8 - வது திமுக கவுன்சிலர் திரிபுர சுந்தரி ஜெய்கணேஷ் தலைமையில் எட்டிக்குளம் பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை செயல் அலுவலர் சதீஷ், மற்றும் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி,சப் - இன்ஸ்பெக்டர் பிரசன்ன வரதன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது ,

எட்டிகுளம் பகுதியில் 150 கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம் இங்குள்ள பகுதிக்கு செல்ல சாலை குறுகலாக உள்ளது,அந்த சாலையை அகலப்படுத்த வேண்டும், அதற்கு தனிநபர் சிலர் ஆக்ரமிப்பு செய்துள்ள இடத்தை அளவீடு செய்து எங்கள் பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைத்துத்தர வேண்டும் என கூறினர். இதை கேட்ட அதிகாரிகள் நிள அளவீடு செய்பவர் விடுப்பில் சென்றுள்ளதால் 2 நாள் அவகாசம் கொடுங்கள், அதன்பிறகு அளவீடு செய்து சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதை கேட்ட மக்கள் 2 நாட்களில் சாலை போடாவிட்டால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என கூறி கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News