பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி திருவிளக்கு பூஜை
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்,ஆந்திரா, கேரளா,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை இரவு வந்து தங்குவர்.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்தல்,மொட்டை அடித்தல், வேப்பஞ்சேலை கட்டுதல்,அடி தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.இந்நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காலை பால்குடம் ஏந்தி பெண்கள் உள்பிரகாரப் புறப்பாடு வந்தனர்.பின்னர்,மூலவருக்கு அபிஷேகம் செய்தனர்.
இரவு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம், மலர்கள் உள்ளிட்டவைகளால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.முன்னதாக மாலை மூலவருக்கு பால், தயிர்,பன்னீர்,சந்தனம், உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்,வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதன் பின்னர் சுவாமி உள் பிரகார புறப்பாடு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர், பூஜையில் கலந்து கொண்ட பெண் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா மேற்பார்வையில் செயல் அலுவலர் பிரகாஷ் தலைமையில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.