திருவள்ளூர் அருகே அம்பேத்கரின் மார்பளவு சிலை அகற்றம்

சின்னம்பேடு கிராமத்தில் உரிய அனுமதியின்றி நிறுவப்பட்ட சட்டமேதை அம்பேத்கரின் மார்பளவு சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-21 14:30 GMT

பொன்னேரி அருகே சின்னம்பேடு கிராமத்தில் உரிய அனுமதியின்றி நிறுவப்பட்ட சட்டமேதை அம்பேத்கரின் மார்பளவு சிலை அகற்றம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்காக பீடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அப்போது சுமார் 4அடி உயரத்தில் சிமெண்டால் ஆன மார்பளவு அம்பேத்கர் சிலை செய்யப்பட்டு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலை நிறுவப்படாமல் அங்குள்ள அங்கன்வாடியில் வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நள்ளிரவில் ஊருக்குள் அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் மார்பளவு அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இருந்த பீடத்தில் திடீரென அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் ஆரணி காவல்துறையினர் மற்றும் பொன்னேரி வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

பொது இடங்களில் சிலைகளை நிறுவுவதற்கு உயர்நீதிமன்றம் தடை உள்ள சூழலில் உரிய அனுமதியின்றி சட்ட மாமேதை அம்பேத்கரின் சிலையை நிறுவியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர் மக்கள் வெண்கல சிலையை நிறுவ உள்ளதாக கூறிய நிலையில் முறையாக அனுமதி பெற்று சிலையை வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

மேலும் அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலையை அங்கிருந்து அகற்றி மீண்டும் அங்கன்வாடியில் பாதுகாப்பாக வைதுதனர். உரிய அனுமதியின்றி நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றுவதற்காக பாதுகாப்பு பணியில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News