மின் இணைப்பு வழங்க லஞ்சம்: திருவள்ளூர் மின் வணிக ஆய்வாளர் கைது

மின் இணைப்பு வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வணிக ஆய்வாளரை திருவள்ளூர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-02-04 03:00 GMT

திருவள்ளூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு சன்சிட்டி பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு,  ஒருமுனை மின்சார இணைப்பு கேட்டு பேரம்பாக்கத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்குள்ள மின் வணிக ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்,  ஒரு முனை மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார், திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்த மின் வணிக ஆய்வாளர் சிவகுமாரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் ஆய்வாளர் அண்ணாமலை தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார்,  சிவகுமாரை லஞ்சப் பணம் ரூ. 3 ஆயிரத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து தீவிர விசாரணைக்குப் பின் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News