ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்
திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பியை ஆதரித்து புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்திபிரச்சாரம் செய்தார்.
நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்த திமுகவை மாணவர்களும், பெற்றோர்களும் மன்னிக்க மாட்டார்கள். தங்கம் விலை 6மாதத்தில் சவரன் 1லட்சம் என உயர்ந்து விடும். வாக்குகளுக்காக சொற்பமாக குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை தேர்தலுக்கு பிறகு இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் அதிமுக கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் நாள்தோறும் கொலைகள், பாலியல் வன்கொடுமை, லாக்கப் மரணம் போன்ற சம்பவங்கள் திமுக ஆட்சியில் நடைபெற்று வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என சாடினார். இந்த களேபரத்திற்கெல்லாம் காரணமாக ஆறாக ஓடும் மது மற்றும் கஞ்சா என்றார். கஞ்சா வியபாரிகள் யார் என பார்த்தால் திமுகவினர் குத்தகைதாரர்களாக இருப்பதாகவும், மத்திய உளவுத்துறை அவரை கைது செய்து திகார் சிறையில் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.கஞ்சா அரக்கனை ஒழிப்பதாக மேலோட்டமாக கூறும் அரசு தான் உருவாக்கி கொண்டிருப்பது வேதனையாக இருப்பதாக கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவை காப்போம் என கூறி வருவதாகவும், அவர் எப்படி வெற்றி பெறுவார் எனவும், ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக கூறினார். எதிர்க்கட்சிகளுக்கு எழுச்சியோடு வரவேற்பை பார்த்து திமுக கூட்டணி பயந்து எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்பதற்கு பதிலாக இந்தியாவை காப்போம் என பேசி வருவதாக கூறினார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த திட்டங்கள் அனைத்தும் மீண்டும் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தை போல தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகவும், 6மாதத்தில் சவரன் 1லட்ச ரூபாய் வந்துவிடும் எனவும், ஏழைகள் தங்கத்தை வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், குழந்தைகளுக்கு தங்கம் என பெயர் மட்டுமே வைத்து கொள்ள முடியும் எனவும் இதற்கெல்லாம் யார் காரணம் எனவும் மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏறிக்கொண்டே இருப்பதாகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என எண்ணி மத்திய அரசு சொற்ப அளவே குறைத்திருப்பதாகவும், தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இரண்டு மடங்கு விலை உயர்த்தப்படும் எனவும், மத்திய அரசும், மாநில அரசும் இரட்டை வேடம் போட்டு நாட்டை சீரழிப்பதாக குற்றம் சுமத்தினார்.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியை அளித்த திமுகவை மாணவர்களும், பெற்றோர்களும் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். 3வருடமாகியும் என்ன சூட்சமம் உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை என தெரிவித்தார். கச்சத்தீவை காங்கிரஸ், திமுக தாரைவார்த்து கொடுத்த நிலையில், 10ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை மீண்டும் கைப்பற்றி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பதாக பாஜக ஏன் வாக்குறுதி அளிக்கவில்லை எனவும் இருவேறு முகம் காட்டுகிறது என்றார்.
கிராம மக்கள் பயன்படும் வகையில் இருந்த அம்மா கிளினிக், அம்மா உணவகம், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி போன்ற திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார். அனைவருக்கும் 1000ருபாய் என கூறிய நிலையில் 40% மக்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை கிடைப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஏற்கனவே கடந்த 5ஆண்டுகளாக எம்பியாக இருந்த ஜெயக்குமாரை தொகுதியில் பார்க்கவில்லை எனவும் அந்த கட்சி வேட்பாளரை புறந்தள்ளி அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார்.15 நிமிட உரையில் சுமார் 3முறை வேட்பாளர் நல்லதம்பிக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி கூறிய போது அருகில் கும்பிட்ட கையாக இருந்த வேட்பாளர் பிரச்சார வாகனத்தில் கீழே இருந்து முரசு சின்னம் பொறித்த பதாகையை வேக வேகமாக எடுத்து வாக்காளர்களிடம் காண்பித்தார். இடையிடையே முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என ஜெகன்மூர்த்தி பேசிய போதெல்லாம் வேகவேகமாக பதாகையை தேடி எடுத்து பிடித்தது வேட்பாளர் மத்தியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன், ஆரணி நகர செயலாளர் தயாளன், மாவட்ட நிர்வாகிகள் ராகேஷ், பானு பிரசாத், மற்றும் முன்னாள் கவுன்சிலர் பகலவன்,புரட்சி பாரத கட்சியை சேர்ந்த ராஜா, வில்சன், மேஷாக், பாஸ்கி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.