பெரியபாளையம் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம்: முதல்வர் தொடங்கி வைப்பு
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டத்தை நாள் முழுவதும் வழங்க திட்டத்தை நீடித்து முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம், கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணிஅம்மன் ஆலயம் உள்ளிட்டவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர். நாள் முழுவதும் அன்னதானம் என்ற திட்டத்தின் படி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆண்டொன்றுக்கு 9,25,600 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும், மூன்று கோடியே 65 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில் தற்பொழுது இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ள சூழலில் 5ஆயிரம் பக்தர்கள் பயனடைவார்கள் எனவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 1500 பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில் இனி வரும் காலங்களில் 2800 பக்தர்கள் பயனடைவார்கள் எனவும், திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் 500 பக்தர்கள் பயனடைந்து வந்த சூழலில் இனி 1800 பக்தர்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்து சமய அறநிலை துறை வேலூர் இணை ஆணையர் விஜயா, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஊத்துக்கோட்டை தாசில்தார் வாசுதேவன், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி. ஜெ.மூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், நிர்வாகிகள் வடமதுரை அப்புன், திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோக மித்ரா, கோவில் செயல் அலுவலர் பிரகாஷ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.