திருவள்ளூரில் ஓட்டல் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் விபத்து
திருவள்ளூரில் தனியார் ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டு வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு 3 பேர் காயம் அடைந்தனர்.
திருவள்ளூரில் ஓட்டல் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூரில் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது.இந்த ஓட்டலுக்கு முன்பாக மோகன், சதீஷ், சாம்ராஜ், பத்மராஜ் ஆகியோ தனது பைக் மற்றும் கார்களை சாலையில் நிறுத்திவிட்டு உணவு உண்பதற்காக சென்று உள்ளனர். அப்பொழுது திருத்தணி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த வேன் ஒன்று ஓட்டலுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் மீது மோதியதில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கார்கள் நடுவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த புல்லரம்பாக்கம் எம்.ஜி.ஆ.ர் நகர் பகுதியை சேர்ந்த பத்மராஜ் (வயது 28 )மீது மோதியதில் காலில் பலத்த காயமுற்று விபத்தில் சிக்கினார்.
மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த பாஸ்கரனும் மற்றும் இரண்டு நபர்களும் விபத்தில் சிக்கி உள்ளனர் அவர்களை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்தினை குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுபோன்று பலமுறை இந்த உணவகத்துக்கு வரும் வாகனங்கள் சாலையில் ஓரத்தில் பார்க்கிங் செய்வதால் விபத்து ஏற்படுகிறது. ஓட்டல் நிர்வாகம் தனியாக பார்க்கிங் இடத்தை அமைக்காததால் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே சாலையில் வாகனங்களை நிறுத்தி வைக்க கூடாது என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்தும், விபத்துக்கு காரணமான ஓட்டல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.