திருவள்ளூர் அருகே பெண் வாங்கிய குடிநீர் பாட்டிலில் கிடந்த ரப்பர் பேண்ட்
திருவள்ளூர் அருகே பெண் வாங்கிய குடிநீர் பாட்டிலில் ரப்பர் பேண்ட் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து நடவடிக்கை எடுக்க கோரி உள்ளார்.
குடிநீர் பாட்டிலில் ரப்பர் பேண்ட் இருந்ததால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பாட்டிலை வாங்கியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் வாணியஞ்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா.இவர், பெரியபாளையம் செல்லும் போது, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் குடிநீர் பாட்டில் வாங்கி சென்றதாக தெரிகிறது.
காரில் குடும்பத்துடன் சென்ற போது அவரின் மகள், குடிப்பதற்காக அந்த பாட்டிலை திறக்க முற்பட்டபோது, குடிநீர் பாட்டிலில் ரப்பர் பேண்ட் இருப்பதை கண்டு தமது தாயிடம் சொல்ல, குடிநீர் பாட்டில் வாங்கிய கடைக்கு திரும்பி வந்து கேட்ட போது, டீலரிடம் கூறுவதாக கடைக்காரர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
2 நாட்கள் கழித்து மீண்டும் கடைக்காரரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு டீலர் சரியான விளக்கம் தரவில்லை என கூறினார் குடிநீர் பாட்டில் வாங்கிய கிருத்திகா.
மேலும், சட்டப்படி லீகல் நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறினார்.
குடிநீர் பாட்டிலில் ரப்பர் பேண்ட் இருந்தால், அது குடிநீரில் ஊறி, தண்ணீர் கெட்டு போகி இருக்கும் எனவும், அந்த தண்ணீரை குடித்தால் பாதிப்பு வரும் எனவும், உணவு பாதுகாப்பு துறை மற்றும் அரசு துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாட்டிலில் முறையாக தேதி கூட அச்சப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.