மணல் குவாரியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் மீது லாரி மோதி உயிரிழப்பு

மணல் குவாரியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;

Update: 2023-08-06 09:35 GMT
கும்மிடிப்பூண்டி அருகில் உள் சவுடு மணல் குவாரி.

கும்மிடிப்பூண்டியில் சவுடு மண் குவாரியில் லாரி சக்கரத்தில் சிக்கி லாரி ஓட்டுநர் பரிதாபமாக பலியானார். பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்து செல்ல உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் அருகில் உள்ள பெரிய ஏரியில் சவுடு மண் அள்ள தனி நபருக்கு மாவட்ட நிர்வாகம்  3000 லோடுகள் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இங்கே எடுக்கப்படும் சவுடு மண் நூற்றுக்கணக்கான லாரிகளின் மூலம் எழுத்துச் சென்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ராகம் பாளையம் கிராமத்தை சேர்ந்த மதன் குமார்(31) என்பவர் இந்த குவாரியில்  லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று சவுடு மண் குவாரியில் மண் ஏற்றி செல்ல லாரியுடன் வந்து லாரியை ஓரம் கட்டி தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மண் கோரையில் மண் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த லாரி ஒன்று நிலை தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மதன் குமார் மீது மோதி ஏறி இறங்கியது. இதில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவலை அறிந்த மதன் குமார் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல அனுமதிக்காமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி ஆகியோர்  இறந்து போன லாரி ஓட்டுனர் மதன்குமார் உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இறந்து போன மதன்குமார் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வாங்கி தர நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் மதன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் உணவு சாப்பிடும் போது லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் இந்த ஏரியின் நீரை நம்பி சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர், காய்கனிகள், பூக்கள் உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு காலங்காலமாக விவசாயம் செய்து வருவதாகவும், இப்பகுதியில் அரசு சவுடு மண் எடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில் விதிகளுக்கு புறம்பாக இருபதுக்கு மேற்பட்ட ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1000.க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு மேலாகவே மணல் எடுத்து செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் அபாயமும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அதிகாரிகள் கண் துடைப்பாக வந்து பார்வையிட்டு  சென்றதாகவும், குற்றம் சாட்டினர். இது மட்டுமல்லாமல் காலை மாலை பள்ளி நேரங்களில் அதிக பாரத்தை ஏற்றுக் கொண்டு லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் கண்டு கொண்டு இந்த குவாரியில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News