கண்காணிப்பு கேமரா கோபுரம் விழுந்ததில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே கண்காணிப்பு கேமரா கோபுரம் உடைந்து மாணவன் மீது விழுந்ததில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே சீத்தஞ்சேரி காப்புக்காட்டில் வனத்துறையினரின் கண்காணிப்பு கேமரா கோபுரம் உடைந்து விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்.அரசு போக்குவரத்து ஊழியரான இவரது மகன் தினேஷ் குமார் ( வயது 21), கன்னிகைபேர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வவந்துள்ளார்.இந்த நிலையில் இவர் இன்று மாலை கல்லூரி முடிந்த பின் கன்னிகைப்பேர் பகுதியில் இருந்து லிஃப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில், சீதஞ்சேரி காப்புக்காடு வனப்பகுதி சாலை வழியாக கல்பட்டு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து தமது கிராமத்திற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த போது, மாலை 4 மணி அளவில் வானிலை மாற்றம் காரணமாக பலமாக காற்று வீசியபோது. அங்கு வனத்துறையினால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா கோபுரம் கல்லூரி மாணவர் தினேஷ் மீது உடைந்து விழுந்ததில் மாணவன் தினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதனிடையே வனத்துறையினரால் உரிய பராமரிப்பின்றி இருந்த கேமரா கோபுரம் உடைந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டதாகவும்,மாணவன் தினேஷின் உயிரிழப்புக்கு வனத்துறையினரின் அஜாக்கிரதையே காரணம் எனக்கூறி மாணவன் தினேஷின் உறவினர்கள் சீத்தஞ்சேரி-வெங்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நிகழ்விடத்தில் பெரியபாளையம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
உயிரிழந்த கல்லூரி மாணவன் தினேஷின் சடலத்தை மீட்ட பெரியபாளையம் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்துக்காக காத்திருந்தபோது கேமரா கோபுரம் சரிந்து உடைந்து கல்லூரி மாணவன் மீது விழுந்து மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.