ஊத்துக்கோட்டையில் மூதாட்டியிடம் 7 சவரன் நகை திருட்டு: 3 பெண்கள் கைது
ஊத்துக்கோட்டையில் பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டியிடம் 7 சவரன் தங்க நகையை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பாப்புலுஅம்மா ( வயது 75). இவர் பிசாட்டூரிலிருந்து திருவலாங்காடு ராமலிங்கபுரம் உள்ள தனது வீட்டிற்கு செல்ல ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கூட்டுச்சாலையில் காத்திருந்துள்ளார்.
தான் தனியாக செல்வதால் அணிந்திருந்த தங்க தங்க நகைகள் 4 சவரன் செயின், 3 சவரன் வளையல், 1/2 சவரன் மோதிரம் ஆகியவற்றை கழட்டி தனது மணிபர்சில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
பின்னர் பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏறி பையில் வைத்திருந்த மணி பர்சை தேடி பார்த்த போது மணிபர்சை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இச்சம்பவம் குறித்து தனது மகன்களுக்கு பாப்புலுஅம்மா தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இதேபோன்று ஊத்துக்கோட்டை பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருடு சம்பவம் தொடர்புடைய வீடியோவையும் சோதனை செய்தனர்.
அதில் மூதாட்டியை மூன்று பெண்கள் பின் தொடர்வதை கண்ட ஊத்துக்கோட்டை போலீசார், பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்புடைய திருத்தணி அடுத்த நல்லடூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா, கல்யாணி, நந்தினி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மூதாட்டியிடம் ஏழரை சவரன் நகையை திருடியதை மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து மூன்று பெண்களை ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் ஊத்துக்கோட்டை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.