புழல் அருகே கள்ளக்காதலன் கொலை வழக்கில் கணவன், சகோதரர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

புழல் அருகே கள்ளக்காதலன் கொலை வழக்கில் கணவன், சகோதரர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-02-04 01:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த விநாயகபுரம் அசோகர் நகரில் வசித்து வந்தவர் சுதாசந்தர் 22. கூலி வேலை செய்து வந்த இவர் தமது மனைவி, குழந்தை என கூறி காதலி ராகவி (19) காதலியின் 1.5 வயது பெண் குழந்தையுடன் கடந்த 1மாதத்திற்கு முன் புழல் அருகே விநாயகபுரத்தில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.

கடந்த 30ஆம் தேதி இரவு தமது காதலியுடன் வில்லிவாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆட்டோவில் மறைந்திருந்த கும்பல் சுதாசந்தரை வழி மறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு ஆட்டோவில் தப்பி சென்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட சுதாசந்தரின் மனைவி ராகவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. சுதாசந்தரும், ராகவியும் முன்னாள் காதலர்கள் என்ற பகீர் தகவல் தெரிய வந்தது. ஆவடி அடுத்த மோரை அருகே வெள்ளச்சேரி பகுதியை சேர்ந்தவர் ராகவி என்பதும் இவர் பள்ளியில் படிக்கும் போதே அதே பகுதியை சேர்ந்த சுதாசந்தர் என்ற இளைஞரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ராகவியின் பெற்றோர் அவரை தேடி பிடித்து காதலனை பிரிந்து விடுமாறு சமாதானப்படுத்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வசந்த் என்பவருக்கு ராகவியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ராகவிக்கு சுமார் 1.5வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

திருமணமானது முதலே ராகவிக்கும், வசத்திற்கும் தகராறு இருந்து வந்ததாகதாகவும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வசந்த்தை பிரிந்து தமது முன்னாள் காதலன் சுதாசந்தருடன் ராகவி சென்றுள்ளார். கடந்த 1மாதத்திற்கு முன் தமது குழந்தை, காதலன் சுதாசந்தருடன் விநாயகபுரத்தில் குடியேறியுள்ளார். அங்கு இவர்கள் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததும், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களை கண்டறிந்து கண்டித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 30ஆம் தேதி இரவு கடைவீதிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இவர்களை வழிமறித்து சுதாசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து புழல் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆட்டோவை கண்டறிந்து ஆட்டோ ஓட்டுனரை பிடித்து புழல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில் பெண்ணின் கணவர் வசந்த், பெண்ணின் சகோதரர்கள் இருவர் கொலை சம்பவத்தை அரங்கேற்றியது உறுதி செய்யப்பட்டது. முதற்கட்டமாக பெண்ணின் ஊரான வெள்ளச்சேரிக்கு சென்ற காவல்துறையினர் உறவினரான சுஷ்மிதா என்ற பெண்ணை கைது செய்து புழல் காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் ராகவியின் அண்ணன்கள் இருவரும் சென்னை துரைப்பாக்கத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த ராபின், உதயராஜ் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

ராகவியின் உடன்பிறந்த அண்ணனான ராபினிடம் நடத்திய விசாரணையில் முன்னாள் காதலனான சுதாசந்தர் சரிவர எந்த வேலைக்கும் செல்வது கிடையாது எனவும், தமது தங்கையை திருமணம் செய்து வாழமாட்டார் என்பதால் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் வசந்த்திற்கு திருமணம் செய்து வைத்ததாக கூறியுள்ளார். ஆனால் குழந்தை பிறந்த பின்னரும் கணவர் வசந்த்திடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு பிரிந்து சென்று சுதாசந்தருடன் ராகவி வாழ்ந்து வந்துள்ளார்.

திருமணத்திற்காக போடப்பட்ட 10சவரனுக்கு மேற்பட்ட நகைகளை எடுத்து கொண்டு ராகவி சுதாசந்தருடன் சென்று விட்டதாகவும், சரியான வேலைக்கு செல்லாத சுதாசந்தர் அந்த நகைகளை விற்று இருவரும் வாழ்ந்து வந்ததாகவும், நகைகள் தீர்ந்தவுடன் தமது தங்கையை வைத்து வாழாமல் சுதாசந்தர் கைவிட்டு விடுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ராகவியின் கணவர் வசந்த் தம்மை பிரிந்து சென்ற மனைவியுடன் வாழ்ந்து வரும் சுதாசந்தரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். மைத்துனர்களுடன் சென்ற கணவர் வசந்த் இருவரையும் தொடர்ந்து கண்காணித்து கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். சம்பவ தினத்தன்று ராகவியின் சகோதரர்கள் உள்ளிட்ட கும்பல் ஆட்டோவில் காத்திருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவர் வசந்த் தமது மனைவி ராகவி அவனது காதலனுடன் இருசக்கர வாகனத்தில் வருவதை கண்காணித்து சம்பவ இடத்தில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தலைமறைவானதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து கொலை வழக்கில் ராகவியின் அண்ணன்கள் ராபின் 21, உதயராஜ் (25), உறவினர் சுஷ்மிதா (29), ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் (25) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் கொலை செய்ய திட்டமிடுதல், கும்பல் கூடுதல், வழிமறித்தல் என கொலை வழக்கில் மேலும் 3பிரிவுகளை இணைத்து 4பிரிவுகளின் கீழ் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள கணவர் வசந்த் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News