திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 136 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் சில்ட்ரன் பிலிவ் இணைந்து பெண்களை தலைமையாக கொண்ட குடும்பத் தலைவிகள் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பராமரிப்பாளர்களிடையே குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
ஐ.ஆர்.சி.டி.எஸ்.தொண்டு நிறுவன இயக்குனர் பி.ஸ்டீபன் வரவேற்றார். திருவள்ளுர் துணை ஆட்சியர் (பொறுப்பு) கேத்தரின் சரண்யா, சில்ட்ரன் பிலிவ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் லாவண்யா கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கருத்துங்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் பேசுகையில், திருவள்ளுர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக தகவல் கிடைத்தது. மாவட்ட நிர்வாகம் சார்பாக குழந்தை திருமணத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 வருடங்களில் மட்டுமே சுமார் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த வருடம் மட்டுமே 2022 - 2023 - ம் ஆண்டில் 23 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் நடத்தப்பட்ட தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் விரிவாக அணுகும்போது தான் குழந்தை திருமணங்கள் தடுக்க முடியும். அதில் ஒரு பகுதியாக தான் இந்த கருத்தரங்கம் இன்று நடக்கிறது.
வருமானம், குடும்ப சூழ்நிலை பெண்கள் தலைமையில் மட்டும் இருக்கும் குடும்பங்களை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் 50 கிராமங்களை கண்டறிந்து. குடும்பத்தலைவி மட்டும் இருக்கும் குடும்பங்கள் கண்டறிந்து அவர்களை நேரில் அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது.
18 வயதுக்குள் இருக்கும் ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் நடக்கும்போது உடலளவில் மனதளவில், உணர்வு ஆகியவை அடங்கிய பக்குவம் என்பது 18 வயதிற்கு மேல் தான் அவர்களுக்கு வரும் என்று அரசு ஒரு சட்டமாகவே வைத்துள்ளது. அதுமட்டுமின்றி கல்வி என்பது முக்கியம். சிறுவயதில் திருமணம் நடக்கும்போது கல்வி பயில்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு தடைபடுகிறது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைகளின்படி, பெண் கல்விக்காக பல்வேறு திட்டங்கள் அரசு சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பட்டப்படிப்புக்காவும், உயர்படிப்புக்காகவும், உயர்கல்விக்காக 'புதுமைப் பெண்' போன்ற முக்கியமான திட்டங்கள் குறித்து அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் சரியான கல்வியை அடையும்போது தான் சமுதாயத்தில் ஒரு வளர்ச்சி ஏற்படும் என்பதற்காகத்தான் அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுவயதில் திருமணம் நடக்கும்போது தான் அந்த பெண் குழந்தையின் கல்வி தொடர முடியாமல் போய்விடுகிறது . அது மட்டுமல்லாமல், உடலளவில் , மனதளவில் பக்குவம் பெறாதது, சிறுவயதில் கர்ப்பம் அடைந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை, கல்வி, வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படுவது போன்ற சூழ்நிலை குழந்தை திருமணத்தால் தான் ஏற்படுகிறது என்று கூறினார்
ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் சில்ட்ரன் பிலிவ் சார்பாக உயர்கல்விக்கு உதவுவதற்காக 30 ஏழை மாணவ மாணவியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் திருவள்ளூர் சார் ஆட்சியர் (பொறுப்பு) கேத்ரின் சரண்யா, சில்ட்ரன் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டுநிறுவன இயக்குநர் ஸ்டீபன், பிலிவ் நிறுவன திட்ட மேலாளர் லாவண்யா கேசவராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.