ஊத்துக்கோட்டை அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
ஊத்துக்கோட்டை அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் படுகாயம் அடைந்தனர்.;
திருவள்ளூர் அரசு மருத்துவமனை (கோப்பு படம்).
ஊத்துக்கோட்டை அருகே மினி வேனில் பூப்பறிக்க கூலி தொழிலாளிகள் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சிறுனியும் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.இவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் நடவு, பூக்கள் பறிக்க செல்வது உள்ளிட்ட கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலவாக்கம் என்ற கிராமத்தில் பூப்பறிக்கும் வேலைக்கு மினி வேனில் ஏரி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் திடீரென வேன் விழுந்தது. இதில் அந்த வேனில் பயணம் செய்த 11 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டதும் ஓடிவந்து அவர்களை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.