வெள்ளப்பெருக்கால் ஆரணியாற்றை கடக்க முடியாமல் 10 கிராம மக்கள் அவதி
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கி 10 கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் கிராம மக்கள் ஆற்றை கடக்க 1அடி உயர வெள்ள நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆரணியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆரணியின் அருகே காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதே போல மங்களம் கிராமத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் சுமார் 1அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும் நிலையில் பொதுமக்கள் 1அடி உயர ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை பொருட்படுத்தாமல் நடந்து சென்று ஆற்றை கடக்கின்றனர்.
அடுத்த சில நாட்களில் மேலும் மழையால் ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டால் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக 10கிமீ சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஆரணியாற்றின் குறுக்கே 20கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அரசு கடந்தாண்டு அறிவித்த நிலையில் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.