விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை குளவி கொட்டி உயிரிழப்பு..!

திருவள்ளூர் அருகே குளவி கொட்டி 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-08-18 03:45 GMT

குளவி (கோப்பு படம்)

திருவள்ளுர் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை குளவி கொட்டியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம், தண்ணீர்குளம் ஊராட்சி பிராமணர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய 6 வயதுடைய மகன் கார்த்திக் கிரிஷ் திருவள்ளுர் காக்களுரில் உள்ள தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது பள்ளி விடுமுறை என்பதால் தனது வீட்டு அருகே உள்ள மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டு இருந்துள்ளார்.

அப்போது வீட்டின் அருகே மரச் செடிகளில் கூடு கட்டி இருந்த குளவி பறந்து வந்து அச்சிறுவனை கொட்டியுள்ளது. குளவி கொட்டியதில் அச்சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.  சிறுவனை மீட்டு பெற்றோர்கள் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் நேற்று  சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவசர சிகிச்சைப்  பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக குழந்தை இல்லாத நிலையில் பிறந்த குழந்தை குளவி கொட்டி உயிரிழந்த சம்பவத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் சிறுவனின்  பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News