பெரியபாளையம் அருகே டெங்கு காய்ச்சலில் பெண் உயிரிழப்பு
பெரியபாளையம் அருகே டெங்கு காய்ச்சலில் பெண் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையம் அடுத்த வெங்கலில் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் ஊராட்சி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் உமா(வயது31). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக உயிழிந்தார்.
இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணத்தினால் மழைநீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அவைகள் கடிப்பதால் பல்வேறு விஷக்காச்சல் வருவதாகவும், ஊராட்சி சார்பில் குடிநீரில் நாள்தோறும் குளோரிநேசன் செய்து குடிநீர் வழங்குவதாகவும் தெருக்களில் பிளீச்சிங் தெளிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் சுகாதாரத்துறை சார்பில் இதுபோன்று டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பின் ஒருவர் இறந்த பின்னர் வந்து தாங்கள் பகுதியில் ஆய்வு செய்வதோடு ஒவ்வொரு மழை காலம் வந்து சென்றதுடனே அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு மக்களின் உடல் நிலையை பரிசோதனை செய்து அதுக்கேற்ப மாத்திரை மருந்துகள் சிகிச்சை அளித்தால் இதுபோன்று விஷக்காச்சல் வருவதை தடுக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்..