கால்வாய் அமைக்கும் பணியின்போது கலவை லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு
பூந்தமல்லி சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணியின்போது கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி - டிரங்க் சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் ஒரு பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று இரவு பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி, அரசு பள்ளி அருகே சாலையின் ஓரம் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது கலவை ஏற்றி வந்த லாரி சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கலவையை அங்கிருந்த கம்பியின் மீது கொட்டிக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக கலவையை ஏற்றி வந்த லாரி அப்படியே அந்த கம்பிகள் கட்டி வைத்திருந்த கால்வாயின் மீது கவிழ்ந்தது.
இதனை கண்டதும் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தார்கள் உரிய நேரத்தில் ஊழியர்கள் உஷார் ஆனதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
போதிய பாதுகாப்பு வசதி ஏதும் இல்லாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது நடந்த இந்த விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் சுரேஷ்(35), சூப்பர்வைசர் சுரேஷ்(32), ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.