லாரியில் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூன்று பேர் கைது
பொன்னேரி அருகே வாகன சோதனையில் லாரியில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூவரை கைது செய்தனர்;
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர்-மணலி பைபாஸ் சாலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது வாகனத்தில் மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் அவை ஆந்திராவுக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.
இதனையடுத்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற சுமார் 15 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரசி கடத்தலில் ஈடுபட்ட காமேஷ், ராஜி, பிரகாஷ் ஆகிய மூவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.