சிறுவாபுரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-11-02 05:30 GMT

சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் முருகப்பெருமாள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி 6வாரங்கள் வழிபட்டால் திருமணத்தடை, வீடு கட்டுதல்,ரியல் எஸ்டேட், உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தொட்டில் கட்டியும் வழிபாடு நடத்துவார்.

குறிப்பாக முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை நாட்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, மீஞ்சூர், பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால் கூட்டம் அலை மோதும்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. நிகழ்ச்சியின் முன்னதாக அதிகாலை மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், தயிர், ஜவ்வாது, தேன், பன்னீர், மஞ்சள், குங்குமம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து கொடிப்பட்டதை சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து உற்சவருக்கு, கொடி மரத்திற்கு தூப,தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆறுநாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

விழாவின் உச்சகட்டமாக வருகின்ற 7ஆம் தேதி சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. 

Tags:    

Similar News