அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் மீட்பு...
அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை - கும்மிடிப்பூண்டி இடையேயான ரயிவே மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டனர்.
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் தண்டவாளத்தில் சடலம் இருந்தது. போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, சற்று தூரத்தில் மேலும் இரண்டு ஆண் சடலங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையெடுத்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர், சுமார் 50 வயது மதிக்கத்தக்க இருவர் என அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்களை காயங்களுடன் போலீஸார் கைப்பற்றினர்.
பின்னர், கைப்பற்றிய 3 ஆண் சடலங்களையும் பிரேதுப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் அனுப்பி வைத்தனர். அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே வரும் போது தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இறந்தவர்கள் அடையாளம் தெரியாத நிலையில் வடமாநில தொழிலாளர்கள் யாரேனும் இரவு நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தனரா என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்களின் உடையில் ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அடையாளம் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ரயிலில் அடிபட்டு தான் மூவரும் இறந்தனரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.