மூன்று கோவில்களின் கதவின் பூட்டை உடைத்து கொள்ளை
பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் 3கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் உள்ள நூக்காளத்தம்மன் கோவில் பூசாரி நேற்றிரவு கோவிலை பூட்டி சென்று விட்டார். கோவிலைத் திறப்பதற்காக இன்று காலை மீண்டும் வந்த போது பூட்டி இருந்த கோவிலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த சுமார் 2சவரன் தங்க சங்கிலி, மற்றும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து கோவிலின் பூசாரி புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல அருகில் உள்ள இலுப்பாக்கம் கிராமத்தில் கன்னியாத்தம்மன் கோயில் பூட்டையும் உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த கொள்ளைச் சம்பவங்கள் குறித்து பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் அம்மன் கோவில்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் சமீப காலத்தில் இருந்து பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கோவில்களில் இதே நிலைமை நீடித்து வருவதாகவும், இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால் இதைப்போன்ற கொள்ளைச் சம்பவங்கள் குறையும். எனவே இரவு நேர காவலர்கள் முக்கிய இடங்களில் கண்காணித்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.