மீன் பிடிப்பதில் தகராறு: காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் மறியல்
பழவேற்காடு அருகே மீன்பிடிப்பதில் மோதல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஒரு தரப்பு மீனவ பெண்கள் சாலை மறியல்.;
சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆண்டிக்குப்பம் கிராமத்தில் சம்பந்தப்பட்ட பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொண்டார்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கடந்த ஓராண்டாக பிரச்சனை நீடித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஆண்டிக்குப்பம் மீனவ கிராமத்தில் இரு தரப்பு மீனவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு வீடுகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்ட நிலையில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு தரப்பிலும் 6 மீனவர்கள் காயம் அடைந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை மீட்டு பழவேற்காடு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருப்பாலைவனம் காவல்துறையினர் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்பிலும் 44 பேர் மற்றும் பலர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருதரப்பு மீனவர்களுக்கு இடையே மோதல் உருவாகியுள்ள சூழலில் பழவேற்காடு ஏரியில் ஆண்டிக்குப்பம் மீனவர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 147 (3) படி மீன்பிடிக்க தடை விதித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஒரு தரப்பு மீனவ பெண்கள் பழவேற்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆண்கள் தற்போது யாரும் ஊரில் இல்லாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமரசப்படுத்திய காவல்துறையினர் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆண்டிக்குப்பம் கிராமத்தில் சம்பந்தப்பட்ட ஆண்டி குப்பம் பகுதிக்குச் சென்று பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார் மேலும் அப்பகுதியில் பதட்டம் நீடிப்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.