பொன்னேரியில் தயாராகி வரும் பேராசிரியர் அன்பழகன் சிலை.. முதல்வர் நேரில் ஆய்வு…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தயாராகி வரும் மறைந்த பேராசிரியர் அன்பழகன் சிலையை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-12-24 05:15 GMT

பொன்னேரியில் தயாராகி வரும் பேராசிரியர் அன்பழகன் சிலையை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களை நினைவு கூறும் வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறையின் தலைமையகமான டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் வளாகம் என பெயர் சூட்டி, பேராசிரியர் அன்பழகன் நினைவு வளைவினை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார்.

மேலும், டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை நிறுவப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகனின் முழு உருவ சிலையானது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் அமைந்துள்ள சிற்பி தீனதயாளன் சிற்பக் கூடத்தில் தயாராகி வருகிறது.

8.5 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக களிமண் மாதிரி சிலை தற்போது வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சிற்பி தீனதயாளன், சிற்பி கார்த்திகேயன் குழுவினர் இந்த சிலையினை தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர்.

இந்த மாதிரி சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ள அந்த சிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், ஆலோசனைகளை சிற்பிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

பேராசிரியர் அன்பழகன் சிலையில் மூக்கு கண்ணாடி கருப்பு நிறத்தில் இருந்த நிலையில் அதன் நிறத்தை பிரவுன் நிறத்தில் மாற்றுமாறு சிற்பிக்கு முதல்வர் அறிவுறுத்தினார். மேலும், சிலை தயாரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் காலம் குறித்தும் சிற்பியிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

கண்ணாடி நிறத்தை மாற்றி முதல்வர் ஒப்பதல் பெற்ற பின்னர், வெண்கல சிலை வார்ப்பு பணிகள் நடைபெறும் எனவும் இந்த சிலை தயாரிப்பு பணிகள் முடிவடைய 2 மாதங்கள் ஆகும் என்றும் சிற்பிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News