கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை..!

கும்மிடிப்பூண்டி ரயில்வே விரிவாக்க பணிக்காக குடியிருப்பு பகுதிகளை அகற்ற நோட்டீஸ் அறிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-11-23 03:15 GMT

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

கும்மிடிப்பூண்டி ரயில்வே விரிவாக்க பணிக்காக குடியிருப்பு பகுதிகளை அகற்ற நோட்டீஸ் அறிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய விரிவாக்கம் செய்வதற்காக சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே நிர்வாகம் சுமார் ₹.25.கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நடும் விழா வீடியோ காணொளி காட்சி மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் பகுதியில் இரு புறம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு பக்கம் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஒட்டி கரிமேடு பகுதியில் சுமார் 50.க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்த ரயில்வே விரிவாக்க பணிகளுக்காக இவர்களுக்கு முறையாக சில மாதங்களுக்கு முன்பு காலி செய்ய வேண்டுமென ரயில்வே துறை நோட்டீஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதற்கான பணியும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. ஓரிரு நாளில் போலீஸ் பாதுகாப்புடன் மேற்கண்ட குடியிருப்புகளை அகற்றுவது என ரயில்வே வட்டாரங்கள் கூறி இருந்தனர். 

இந்த அறிவிப்பை அறிந்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி கரிமேடு கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் குடியிருப்பு வீட்டை அகற்றக்கூடாது என கூறி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை ஒருங்கிணைப்பாளர் சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் ஆகிய தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்டவர்கள், தெரிவிக்கையில் பல ஆண்டுகளாக தாங்கள் மேற்கண்ட இடத்தில் வசித்து வருவதாகவும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்னரே வீடுகளை அகற்ற வேண்டும் எனக் கோரி அதற்கு தங்களுக்கு 6.மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.மேலும் இவர்கள் மாற்று இடத்தை வழங்கிட வேண்டுமென கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், அன்றைய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆல். பி.ஜான் வர்கீஸ் இடம் மனு அளித்து 6.மாத காலம் ஆகியும் மாற்று இடத்தை வருவாய் துறையினர் வழங்கவில்லை எனவும்  குற்றம் சாட்டினர். 

ஆனால் தற்போது மழைக்காலம் என்பதால் வீடுகளை காலி செய்வது தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், தங்களுக்கு அரசு மாற்று இடம் வழங்கியதும் தாங்களாகவே வீடுகளை காலி செய்து வெளியேறுகிறோம். அதுவரை தற்போது குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கூடாது கோஷமிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் போலீஸ் ஆய்வாளர் வடிவேல் முருகன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வட்டாட்சியர் ப்ரீத்தியிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றார். பேச்சுவார்த்தையின் போது பேசிய வட்டாட்சியர் பிரீத்தி புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள வண்டி பாட்டை வகைப்பாட்டு நிலத்தை ஊராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பின் அதனை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிரித்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியும் தற்போது குடியிருப்புகளை அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதனைத்  தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரிமேடு பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News