ஸ்ரீ தேச மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..!
ஆவடி அருகே ஸ்ரீ தேச மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
ஆவடி அருகே புதிய கன்னியம்மன் நகரில் ஸ்ரீ தேச மாரியம்மன் ஆலயத்தில் 12.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து அம்மன் வழிபாடு நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீ தேச மாரி அம்மன் ஆலயத்தின் 12.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்ட திருவிழா இன்று மூன்றாம் நாள் கங்கையில் புறப்பட்ட ஸ்ரீ தேச மாரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், குங்குமம், ஜவ்வாது, பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் வண்ண மலர்களாலும், திரு ஆவணங்களால் அம்மனை அலங்காரம் செய்து தூப, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராம பெண்கள் ஆலய வளாகத்தில் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை ஆலயத்தில் சுமங்கலி பூஜை, விளக்கு பூஜை, மற்றும் அக்னி சட்டி ஏந்தி முளைப்பாரி எடுத்து பக்தர்கள் உடம்பு முழுவதும் அலகு குத்தியும் ஊர்வலமாக கிராம எல்லை பகுதியிலிருந்து வந்து பின்னர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கினர்.
குண்டம் இறங்குவதற்காக விரதம் இருந்து காப்பு கட்டிய 500.க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்பு வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் அம்மன் புதிய கன்னியம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள அனைத்து முக்கிய தெருக்களின் வழியாக அம்மன் வீதி உலா ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் கிராம பொதுமக்கள் அம்மனுக்கு கற்பூர ஆரத்தி, எடுத்து தேங்காய் உடைத்து நேத்தி கடனை நிறைவேற்றினர். இந்த தீமிதி திரு விழாவில் கலந்துகொள்வதற்காக அருகில் இருக்கக்கூடிய பல கிராமத்து பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.