ஊரடங்கை பயன்படுத்தி சைக்கிளை திருடும் மர்ம நபர்கள்; சிசிடிவி பதிவு
ஊரடங்கை பயன்படுத்தி சென்னையில் சைக்கிளை திருடும் சம்பவம் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கை பயன்படுத்தி சென்னையில் சர்வசாதாரணமாக இருசக்கர வாகனங்களில் வந்து சைக்கிளை திருடும் சம்பவம் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட கொரட்டுர் பகுதியில் அதிகளவு திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதற்கிடையில் நேற்று இரவு பாடி தேவர் நகர் காந்தி தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள் இருவர் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளைத் திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்தக் காட்சியில் குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டவாரே செல்லும் இளைஞர்கள் வீட்டருகே மக்கள் நடமாட்டம் இல்லாததை உணர்ந்து, வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த சைக்கிளை திருடி இருசக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு தப்பி செல்வது தெரியவந்துள்ளது.
இரவில் சைக்கிள் திருடும் இளைஞர்கள் எவ்வித அச்சமுமின்றி இருசக்கர வாகனத்தில் உலாவந்து சைக்கிளை அலேக்காக தூக்கி மடியில் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திருடி செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். சைக்கிளை திருடி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வீட்டின் வெளியே பூட்டி வைத்திருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.