அயப்பாக்கம் பகுதியில் நடமாடும் காய்கறி வாகனத்தை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ கணபதி
அயப்பாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு வாகனங்களில் காய்கறி விநியோகத்தை மதுரவாயில் எம்.எல்.ஏ கணபதி துவங்கி வைத்தார்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த இன்று முதல் 7 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசின் சார்பில் வாகனங்கள் மூலம் காய்கறிகளை வீடுகள் தோறும் சென்று வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தடையில்லாமல் காய்கறிகளை வாகனங்களில் வழங்கும் பணியை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் சுமார் 200 வாகனங்களில் பொதுமக்களுக்கு வீடு தேடி காய்கறி வழங்கும் பணி தொடங்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பெண் வியாபரிகள் ஏராளமானவர்கள் காய்கனி விற்பனை வாகனத்தை இயக்கி சென்றனர். இந்த வாகனம் மூலம் தினமும் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வாகனங்களில் சென்று பொருட்களை வழங்க வேண்டும் என்றும் மக்களின் தேவைக்கேற்ப வாகனங்களில் காய்கறி, பழங்கள் வழங்கப்படுவது அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உரிய விலைக்கு மேல் கூடுதல் விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகார்களை ஊராட்சியில் தெரிவித்தால் அந்த வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.