சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தங்க நகை திருடிய போலி டாக்டர் கைது

முத்தாபுதுபேட்டை பகுதியில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தங்க நகை திருடிய போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-08 02:45 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த முத்தாபுதுபேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூரைச் சேர்ந்த பிரபு என்ற மருத்துவர் புதிதாக மருத்துவமனை ஒன்று ஆரம்பித்து அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பெண் ஒருவர் இவரிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது உங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் நீங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றி வேண்டுமென அந்த பெண்ணிடம் டாக்டர் கூறியுள்ளார்.

ஆனால் அந்தப் பெண் தன் அணிந்திருந்த நகைகளை கழற்ற மறுப்பு தெரிவித்ததால், அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அந்தப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை திருடியுள்ளார். அவருடைய நகைகளை காணாததைக் கண்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் டாக்டரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். 10வகுப்பு படித்த இவர்,  மருத்துவ உதவியாளராக பணி செய்துவிட்டு முத்தாபுதுபேட்டை பகுதியில் மருத்துவமனை ஆரம்பித்து மருத்துவர் எனக் கூறி பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் வேறு யாரிடமாவது இதுபோன்ற நகைகளை திருடி உள்ளாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சைக்காக கிளினிக்கிற்கு வந்த பெண்ணிடம் போலி மருத்துவர் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News