ஆவடி அருகே ஏரியில் சுற்றிய புள்ளிமானை கடித்துக்குதறிய நாய்கள், மீட்ட பொதுமக்கள்
ஆவடி அருகே ஏரியில் சுற்றிய புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் புள்ளிமானை மீட்டனர்.;
ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பதாகை பகுதியில் உள்ள ஏரியில் மாலை 7 மணிளவில் புள்ளி மான் ஒன்று நாய்களால் கடித்து குதறப்பட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளது.
இந்த தகவல் அறிந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினார்கள். பின்னர் இதுகுறித்து உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் படி அங்கு விரைந்து வந்த போலீசார் காயங்களுடன் கிடந்த அந்த மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இது குறித்து திருவள்ளூர் மாவட்டம் சீத்தாஞ்சேரி வனவிலங்கு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த வனக்காப்பாளர் நாகராஜ், மற்றும் கிருஷ்ணன் ஆகியோரிடம் காயங்களுடன் இருந்த புள்ளிமானை ஒப்படைத்தனர். பின்னர் விலங்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
காயங்கள் ஆறின பின்னர் மான வனப்பகுதிக்குள் கொண்டு விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.