பருத்திப்பட்டு ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள், படகு மூலம் அகற்றும் பணி தீவிரம்
ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் செத்து மிதக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்களை படகு மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 87.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஏரி, பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில் புனரமைக்க ரூ. 28.16 கோடி மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் படகு சவாரியை தொடங்கி மக்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. தற்போது கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனுமதிக்கப்படாத நிலையில் உடற்பயிற்சி மற்றும் நடைப் பயிற்சிக்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பருத்திப்பட்டு ஏரியில் ஆவடி மாநகராட்சியின் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் கால்வாய் வழியாக நேரடியாக கழிவுநீர் கலந்து ஏரிக்கு வருவதால் நீர் மாசடைந்து வந்தது.
கடந்த ஒரு வாரமாக பருத்திப்பட்டு ஏரியில் கொஞ்சம் கொஞ்சமாக மீன்கள் செத்து மிதந்து வந்தது. நேற்று காலை திடீரென சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் இறந்த மிதந்தன.
ஏரியில் செத்து கிடக்கும் மீன்களால் தற்போது துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால் நடைபயிற்சி செய்ய முடியாமல் பொதுமக்கள் தவிபத்து வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தற்போது செத்து மிதக்கும் மீன்களை படகு மூலம் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.