பைக், கார் மோதி விபத்து -டெலிவரி பாய் பலி

Update: 2021-04-17 12:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தனியார் உணவு நிறுவன டெலிவரி பாய் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரை நியூ காலனியை சேர்ந்தவர் அஜித். இவர் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் உணவு சப்ளை செய்து வரும் ஊழியர். இவரது நண்பர் திருமுல்லைவாயில் காந்தி தெருவை சேர்ந்த சின்னையா. இந்நிலையில் நேற்று இரவு அஜித் தனது நண்பர் சின்னையா உடன் பைக்கில் அம்பத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றார். பின்னர் அவர்கள் படம் பார்த்து விட்டு பைக்கில் வந்துள்ளனர். இவர்கள் அம்பத்தூர் சி.டி.எச். சாலை தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் வந்த பைக் மீது மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அஜித் இறந்ததாக தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த சின்னையாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News