ஆவடி: சேதமடைந்துள்ள 3 ஆயிரம் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆவடி மாநகராட்சியில் சேதமடைந்துள்ள சுமார் 3 ஆயிரம் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்கே மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்புத் துறை சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் மட்டுமின்றி பல்வேறு கல்விசார் நிறுவனங்களும் இயங்கி வருகிறது.
ஆவடியில் உட்புற சாலைகள் சுமார் 4,500 சாலைகள் உள்ளன. இந்த நிலையில் இதில் சோழம்பேடு சாலை, சின்னம்மன் கோவில் சாலை, அன்னூர் சாலை, பட்டாபிராம், திருமுல்லைவாயல், சேக்காடு, கோவர்தனகிரி, தண்டுரை, கோவில்பதாகை போன்ற பல்வேறு பகுதியில் உள்ள 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்துள்ளதால், பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக போடப்பட்ட ஓராண்டிலேயே சாலைகள் சேதம் அடைவதாகவும் தரமற்ற சாலைகள் போடப்படுவதாகவும் இதனை சாலை போடும்போது ஆவடி மாநகராட்சி பொறியாளர் பிரிவு சார்ந்த அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து ஆவடி மாநகராட்சி பொறியாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது சாலைகள் அனைத்தையும் ஆய்வு செய்து இருப்பதாகவும் விரைவில் சாலை போடும் பணிகள் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
சேதமடைந்துள்ள சாலையால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படும், முதியவர்கள் நடந்து செல்லவும் சிரமமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்து உடனடி நடவடிக்கை கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.