ஆவடி: 19 பயனாளிகளுக்கு முதிர்கன்னி, விதவை, முதியோர் உதவி தொகை ஆணை!
பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலித்து 19 பயனாளிகளுக்கு முதிர்கன்னி, விதவை, முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பாக முதலமைச்சர் திட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலித்து தீர்வுகாணபட்டவர்களில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா ஆகியோர் இன்று 19 பயனாளிகளுக்கு முதிர்கன்னி, விதவை மற்றும் முதியோர் உதவி தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் கடந்த காலங்களில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று மனுக்கள் பெற்றார். இதனையடுத்து கடந்த 18.5.21 அன்று தலைமைச் செயலகத்தில் மனுக்கள் தீர்வு நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
,திருவள்ளூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் 17,004 அவற்றில் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது இதுவரை 15,959. இதில் தீர்வு காணப்பட்ட மனுக்கள் 459. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மேல் நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைத்து 100 நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள மனுக்கள் 459. ஆவடி தொகுதிக்குட்பட்டு மொத்தம் 128 மனுக்கள் பெறப்பட்டு அதில் தீர்வு காணப்பட்ட 19 நபர்களின் மனுக்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்குள் அனைத்து மனுக்களுக்குமான தீர்வு எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஆவடி வட்டாட்சியர் செல்வம், தனி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.