ஆவடி மாநகராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பில் பணிகள் துவக்கம்.. அமைச்சர் நாசர் பங்கேற்பு..
ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருமுல்லைவாயிலில் தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பிடம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டுரை மார்க்கெட் (வார்டு எண்- 20), எம்ஜிஆர் நகர் (வார்டு எண் 22), திருமுல்லைவாயில் (வார்டு எண் 26) மற்றும் 8 ஆவது வார்டு பகுதியில் புதிதாக கழிப்பிடம் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் கட்டும் பணியை மேற்கொள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தொடங்கி வைத்தார்.
இதேபோல, நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் ஆவடி மாநகராட்சி 1 ஆவது வார்டில் கோவில் குளத்தினை தூர்வாரி புனரமைத்தல் பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டத்தினையும் அமைச்சர் நாசர் துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அம்ருத் 2.0 திட்டப் பணியின் படி ஆவடி மாநகராட்சியில் 4 ஆவது வார்டில் மிட்டன மல்லியில் உள்ள குளத்தினை தூர்வாரி புனரமைத்தல் பணியை மேற்கொள்ள அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழ் நிதியை ஒதுக்கி அந்த திட்டத்தையும் அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆவடி மாநகராட்சி 12 ஆவது வார்டில் கோயில் பதாகை பகுதியில் நூலகம் கட்டிடம் அமைத்தல் பணியையும் அமைச்சர் நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார். இதேபோல் பதினைந்தாவது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சி 28 ஆவது வார்டில் 100 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்தல், ஆவடி மாநகராட்சி 6 ஆவது வார்டு சிங்கார வேலன் தெருவில் 140 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்தல் பணியை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தத் திட்டத்தினையும் அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.
அதன்பின் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 6 ஆவது வார்டு சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் 282 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளையும் அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், மாநகர ஆணையர் தர்ப்பகராஜ், திமுக மாநகர செயலாளர் ஆசிம்ராஜா, பகுதி செயலாளர்கள் பொன் விஜயன், நாராயண பிரசாத், மண்டல தலைவர்கள் அமுதா பேபி சேகர், அம்மு, ஜோதிலட்சுமி, அரசு அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.