நெல்லையில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு

நெல்லையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரத்தில் பதட்டம் நீடிப்பதால் முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

Update: 2021-06-17 05:58 GMT

முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது மருதநகர் பகுதியை சேர்ந்த வாலிபர் பாலமுருகன் என்ற பால முகேஷை சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். படுகாயமடைந்த பாலமுகேஷ் தற்போது நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் பால முகேஷ் தரப்பினர் பதிலுக்கு எதிர் தரப்பினரிடம் தகராறு ஈடுபட்டதால், நேற்றிரவு இருதரப்பு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஆட்டோ, பைக் மற்றும் சில வீடுகளில் ஒரு தரப்பினர் கல்லெறிந்து சேதப்படுத்தினர். மேலும் வைக்கோல் படப்பும் தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் ஒரு தரப்பினர் மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலையில் அமர்ந்து இரவு பல மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையர் ராஜ ராஜன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து முன்னீர் பள்ளம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நீடிப்பதால் இரவு முழுதும் விடிய விடிய அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையிலான ஜநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பால முகேஷ் வெட்டுப்பட்ட சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து காவல் துறை உயரதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News